Showing posts with label சுப்ரமணியபுரம். Show all posts
Showing posts with label சுப்ரமணியபுரம். Show all posts

சுப்ரமணியபுரம்


வேலை இல்லாம வெட்டியா ஊரைச் சுத்திக்கிட்டு இருக்கிற 5 பேரோட வாழ்க்கை எப்பிடி தடம் மாறிப் போகுதுங்கறதை முடிஞ்ச வரைக்கும் யதார்த்தத்தை மீறாம எடுத்திருக்காங்க. அறிமுக இயக்குனருக்கும் அவர் குழுவுக்கும் முதலில் பாராட்டுக்கள்!

அழகர், பரமன், காசி, டும்கா, இன்னொருத்தர் (பேரு மறந்து போச்சு) இவங்க அஞ்சு பேரும் ஊரைச் சுத்திக்கிட்டு வம்பு வளர்த்துக்கிட்டு, ஒரு லோக்கல் அரசியல்வாதிக்கு
ம் அவரோட தம்பிக்கும் எடுபிடி வேலைகள் செஞ்சிக்கிட்டு, அவர் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற ‘சித்தன்’ சவுண்டு சர்வீஸ் கடையிலேயே பொழுதைக் கழிக்கிறாங்க. அந்த அரசியல்வாதியோட பொண்ணு துளசிக்கும் அழகருக்கும் கண்ணால பேசியே காதல்.

ஒரு கட்டத்தில, வேலைக்குப் போய் சம்பாதின்னு காதலி சொன்னதும், நம்ம அழகர் படிச்சு, கலெக்டர் ஆகப் போறாருன்னு நினைக்காதீங்க. அவர் முதலில் எடுத்துச் செய்வது ஒரு கொலை! தங்களுக்கு பல நேரங்களிலும் உதவி செஞ்ச அரசியல்வாதிக்கு ஒரு சிக்கல் வந்ததும், உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்து, அவங்
க செய்யும் முதல் கொலை, அவங்க வாழ்க்கையையே புரட்டிப் போடுது. அழகரும், பரமனும் கூட்டாகச் செய்யும் அந்தக் கொலையின் விளைவாக ஜெயில் தண்டனை, அங்க கிடைக்கிற நட்பு, அந்த நட்புக்காக மேலும் கொலைன்னு அவங்களோட குற்றப் பட்டியல் நீளுது.

தங்களைக் கைவிட்ட அரசியல்வாதியையும், அவர் தம்பியையும் கொல்லத் துடிக்கிற அழகரும் பரமனும் தலைமறைவா அலைய, இதுக்கிடையில் துளசி-அழகர் காதலும் ஒரு பக்கமா வளர்ந்துட்டு இருக்கு. ஒரு நாள் இவங்க காதல் பொண்ணு வீட்டுக்குத் தெரிஞ்சதும், அதை அவங்க
எப்பிடி அணுகுறாங்க? எப்பிடி உபயோகிக்கிறாங்க? படத்தில் பார்த்துத் தெரிஞ்சிக்கோங்க. எனக்குக் கொஞ்சம் ‘பட்டியல்’ ஞாபகம் வந்துச்சு.

அழகர்-பரமனாக ஜெய்-இயக்குனர் M.சசிக்குமார். படம் முழுக்கவே இவங்கதான் இருந்தாலும், மற்ற கதாபாத்திரங்களுக்கும் இயக்குனர் குறை வைக்கல.  ‘டும்கான்
’ கேரக்டர் சூப்பர். மதுரைத் தமிழ்-ல வெளுக்குறாரு. கஞ்சா கருப்புக்கு இனிமே காமெடியோடு சேர்ந்த குணச்சித்திர பாத்திரங்களும் கிடைக்கும். அறிமுக நாயகி ஸ்வாதிக்கு நல்ல குடும்பப் பாங்கான முகம். பார்த்ததுமே, மதுரைக்காரப் பொண்ணுன்னு சொல்லலாம். ஆனா, குரல் கொடுத்தவங்களை மாத்திருக்காலாம், மதுரைத் தமிழே வரலை. அதே மாதிரி, நாயகன் ஜெய் பேசும் போது ‘சென்னைத் தமிழ்’ வாசம்!

படத்தில் முக்கியமான அம்சங்கள் ஆர்ட் டைரக்ஷனும் இசையும். கதை பெரும்பாலும் 1980-ல நடக்கிறதால, அந்த காலத்தில் இருந்த ஹேர் ஸ்டைல், உடைகள், டவுன் பஸ், கருப்பு டெலிஃபோன், ஸ்கூட்டர், பழைய மாடல் அம்பாஸடர் கார், பழைய பத்து, இரண்டு, ஒரு ரூபாய் நோட்டுக்கள், இளையராஜா பாடல்கள், வானொலி அறிவிப்பு, சுவர் விளம்பரங்கள்னு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து கவனமா பண்ணிருக்காங்க. மதுரைப் பக்கம் அந்தக் காலத்து (இந்தக் காலத்திலும்?!) ஃபேஷனான காது வளையம், அன்னப் பறவைகள் டாலர் போட்ட ‘ஷார்ட்’ செயின் எல்லாத்தையும் கொண்டு வந்துட்டாங்க. ஜேம்ஸ் வசந்தன் இசையில் ‘கண்கள் இரண்டால்’ பாட்டு இன்னும் கொஞ்ச நாள் டிவி, எஃப்.எம் சானல்களில் போட்டுத் தேய்க்கப்படும். பின்னணி இசையில் பின்னியிருக்கார் ஜேம்ஸ்.

எல்லாம் சரி, படம் பார்த்துட்டு வந்து ஒரு நாளான பிறகு, படத்தைப் பத்திப் பதிவெழுத வந்தா, முதலில் நினைவுக்கு வருவது ரத்தம்! கத்திகளும், அரிவாள்களும் சர்வ சாதாரணமா உபயோகிக்கப்படும் போது, நம்ம மேல ரத்தம் தெரிச்சிடுமோன்னு பயப்படற அளவுக்கு இருக்கு! மொத்தப் படமும் பீடிப் புகைக்கு நடுவிலேயே எடுத்திருக்காங்க. இறுதிக் காட்சி அதிர வைப்பது நிஜம். அதை விட அதிர்ச்சி என்னன்னா, தியேட்டரில் ஆடியன்ஸ் ரியாக்ஷன்! இவ்வளவு வன்முறையையும், குரூரக் கொலைகளையும் பார்க்கும் போது, இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்-ல ஜெயிச்ச மாதிரி அப்பிடி ஒரு உற்சாகம், கைதட்டல், விசில் சத்தம் காதைக் கிழிச்சுது! இந்த மாதிரிப் படங்கள் கற்பனையா இருந்தாலும், உண்மைச் சம்பவங்களை மையமா வச்சு எடுத்திருந்தாலும், மனுசன் மனசுல இருக்கிற வன்மம், வெறி, மிருகத்தனம் எல்லாத்தையும் பளிச்சுன்னு காட்டுது. சமூகத்துல நடக்குற குற்றங்களைத் தான் அவங்க படமா எடுக்குறாங்களா? இல்லை இந்த மாதிரி படங்களைப் பார்த்துத்தான் சமூகம் குற்றங்களை தைரியமா செய்யுதா?

துப்பாக்கி எடுத்தவனுக்குத் துப்பாக்கியால சாவு, கத்தி எடுத்தவனுக்குக் கத்தியால சாவுன்னு நிரூபிக்க ‘நாயகன்’, ‘தளபதி’, ‘பட்டியல்’ வரிசையில் ‘சுப்ரமணியபுரம்’.